ரூ.8,000 கோடியில் பிரம்மாண்ட ஒப்பந்தம்... பாகிஸ்தானிடமிருந்து 24 போர் விமானங்களை வாங்கும் சோமாலியா!
பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து தயாரித்துள்ள ஜேஎப்-17 போர் விமானங்களை வாங்குவது தொடர்பாகச் சோமாலியா அரசு பாகிஸ்தானுடன் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சோமாலியா மொத்தம் 24 'ஜேஎப்-17 தண்டர்பிளாக் 3' ரக போர் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 8,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் சோமாலிய விமானப்படைத் தளபதி முகமது ஷேக் அலி பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது போர் விமானங்களை வாங்குவது குறித்த பேச்சுவார்த்தை இறுதி நிலையை எட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பனிப்போர் காலத்திற்குப் பிறகு சோமாலியா தனது பாதுகாப்புத் துறைக்காக மேற்கொள்ளும் மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தம் இதுவாகும். இது பாகிஸ்தானின் ராணுவத் தளவாட ஏற்றுமதிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
சீனாவின் செஷ்ண்டு நிறுவனம் மற்றும் பாகிஸ்தான் ஏரோநாட்டிகல் காம்ப்ளக்ஸ் ஆகியவை இணைந்து இந்த இலகு ரக போர் விமானங்களை உருவாக்கியுள்ளன. இந்தியாவிற்கு எதிரான மோதல்களின் போது இந்த ரக விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சோமாலியா இந்த விமானங்களை வாங்குவதன் மூலம் அந்தப் பிராந்தியத்தில் தனது வான் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது.