விவசாயிகளுக்கு 'ரூ.9,000'.. சோலார் போட்டால் 'ரூ.1 லட்சம்' - பாஜக தேர்தல் அறிக்கையில் அள்ளிக்கொடுத்த நட்டா!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தனது ‘அதிசய’ தேர்தல் அறிக்கையை இன்று (ஏப்.14) வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பெண்களுக்கு மாதம் ரூ.2,000 என ஆசை காட்டிய பாஜக, இப்போது விவசாயிகளையும், நடுத்தர வர்க்கத்தினரையும் குறிவைத்து அடுத்தடுத்த அதிரடி வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது.
மத்திய அரசு தற்போது வழங்கி வரும் பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் கிடைக்கும் ரூ.6,000-த்துடன், மாநில அரசின் பங்காகக் கூடுதலாக ரூ.3,000 சேர்த்து வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மொத்தம் ரூ.9,000 நேரடியாக வங்கிக் கணக்கில் வந்து சேரும்.
சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த, கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் இறால் பண்ணை அமைக்க தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் மின்சாரச் செலவைக் குறைக்க 'ரூஃப்-டாப்' சோலார் பேனல் அமைக்கும் திட்டத்தில் பாஜக பெரிய ஸ்கெட்ச் போட்டுள்ளது. மத்திய அரசின் ஊக்கத்தொகையுடன் மாநில அரசின் பங்காக ரூ.25,000 சேர்த்து, மொத்தம் ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும். இதன் மூலம் மின்சார பில்லில் இருந்து மக்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும் என ஜே.பி. நட்டா முழங்கியுள்ளார்.
பொங்கல், தீபாவளி மற்றும் தமிழ் புத்தாண்டு என ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசம். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 மற்றும் ஒருமுறை நிதியாக ரூ.10,000 வழங்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மாதம் ரூ.2,000 ஓய்வூதியம்.