டிரம்ப் மகனைக் கொல்பவருக்கு ரூ.95 கோடி பரிசு... ஈரான் அரசு ஊடகம்!

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 20 வயது இளைய மகன் பாரன் டிரம்பை இலக்கு வைத்து, ஈரான் அரசு தொலைக்காட்சியான சேனல் 3-ல் ஒளிபரப்பப்பட்ட வீடியோ உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "பாரன் டிரம்பை எங்கு, எப்படித் தாக்குவது?" என்ற தலைப்பில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை சார்ந்த அமைப்பால் இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது.

பாரன் டிரம்பைப் படுகொலை செய்பவர்களுக்கு 1 கோடி அமெரிக்க டாலர் (சுமார் இந்திய மதிப்பில் ₹95 கோடிக்கும் மேல்) பரிசு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. பாரன் பயிலும் நியூயார்க் பல்கலைக்கழகம், அவரது பயண வாகனங்கள், பாதுகாப்பு அதிகாரிகளின் வழிகள் மற்றும் அவரது ஆன்லைன் விளையாட்டுகள் வரை தங்களது முழுமையான கண்காணிப்பில் இருப்பதாக அந்த வீடியோவில் உரிமை கோரப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபரின் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்கும் அமெரிக்க ரகசிய சேவை இந்த அச்சுறுத்தல் வீடியோவைக் தீவிரமாகக் கவனத்தில் கொண்டு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

"எங்கள் பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு வரும் எந்தவொரு அச்சுறுத்தலையும் நாங்கள் தீவிரமாக விசாரிப்போம்" என ரகசிய சேவையின் செய்தித் தொடர்பாளர் நேட் ஹெரிங் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அதிபரின் மனைவி மெலனியா டிரம்பையும் குறிவைத்து இதுபோன்று ஈரானிய ஊடகங்கள் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், தற்போது பாரன் டிரம்ப் இலக்காக்கப்பட்டுள்ளது இரு நாடுகளிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.