தோட்டத்தில் புலி உலா வருவதாக வதந்தி... ஏ.ஐ. வீடியோ வெளியிட்ட வாலிபருக்கு நூதன தண்டனை!
கர்நாடக மாநிலத்தில் வேலைக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காகத் தனது தோட்டத்தில் புலி நடமாடுவது போன்ற ஏஐ வீடியோவை உருவாக்கி சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாலிபருக்கு வனத்துறையினர் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் கொப்பல் டவுன் பகுதிக்கு அருகில் உள்ள காவலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஈரண்ணா (25). இவருக்கு வனப்பகுதியை ஒட்டி சொந்தமாகத் தோட்டம் ஒன்று உள்ளது. ஈரண்ணாவைத் தொடர்ந்து தோட்டத்திற்கு வேலைக்குச் செல்லுமாறு அவரது குடும்பத்தினர் வற்புறுத்தி வந்துள்ளனர்.
வேலைக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காக விசித்திரமான யோசனை செய்த ஈரண்ணா, ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது தோட்டத்தில் புலி உலா வருவது போன்ற போலி வீடியோவை உருவாக்கினார். அந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டதுடன், தன் குடும்பத்தினரிடமும் காட்டி "தோட்டத்தில் புலி உலா வருகிறது, அதனால் தான் வேலைக்குச் செல்ல மாட்டேன்" என்று கூறியுள்ளார். வீடியோ வைரலானதாலும், தோட்டத்தில் புலி நடமாட்டம் இருப்பதாக நம்பியதாலும் கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் ஈரண்ணாவின் தோட்டத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், அங்குப் புலிகளின் கால் தடங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து ஈரண்ணாவை அழைத்து விசாரித்தபோது, வேலைக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காகத் தான் ஏ.ஐ. மூலம் போலியாக வீடியோ தயாரித்து வெளியிட்டதை அவர் ஒப்புக்கொண்டார்.
போலி வீடியோவைப் பரப்பிப் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியதற்கும், வனத்துறை அதிகாரிகளின் நேரத்தை வீணடித்ததற்கும் அதிகாரிகள் அவருக்கு நூதன தண்டனை வழங்கினர். அதன்படி, ஈரண்ணாவை அவரது தோட்டத்திற்கே அழைத்துச் சென்று, கிராம மக்கள் முன்னிலையில் 50 தோப்புகரணம் போட வைத்தனர். மேலும், இனி இதுபோன்று சமூக வலைதளங்களை வம்பிழுக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். தற்போது ஈரண்ணா தோப்புகரணம் போடும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.