ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷ்யா, சீனா ஆதரவு - பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கூட்டுப் பிரகடனம்!

 

டெல்லியில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது வெளியிடப்பட்ட கூட்டுப் பிரகடனத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக மாறுவதற்குச் சீனாவும் ரஷ்யாவும் தங்களின் முழுமையான ஆதரவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முதல் நாளான நேற்று, உறுப்பு நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன் கூட்டுப் பிரகடனம் வெளியிடப்பட்டது. இதில் இந்தியாவின் நீண்ட கால கோரிக்கையான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தத்திற்கு வலுவான ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள சீனாவும் ரஷியாவும், பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர் உள்ளிட்ட முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்ற விருப்பத்திற்குத் தங்களது ஆதரவை மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை மேலும் ஜனநாயக ரீதியாகவும் திறமையானதாகவும் மாற்றுவது குறித்தும், வளர்ந்து வரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது குறித்தும் பிரகடனத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பஹல்காம் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், காசாவில் முழுமையான போர் நிறுத்தமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.