ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் - ரஷ்யா மீண்டும் வெளிப்படையான ஆதரவு!
நியூயார்க்கில் நடைபெற்று வரும் 81-வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தொடரில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ரஷ்யா தனது வலுவான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ரோவ், உலகளாவிய கட்டமைப்பு முறையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதித்துவத்தை உடனடியாக விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கான இந்தியாவின் கோரிக்கைக்கும், பிரேசிலின் கோரிக்கைக்கும் ரஷ்யா முழுமையான ஆதரவளிப்பதாக அவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யும்போது, மேற்கு நாடுகளுக்குக் கூடுதலாக மேலும் பல இடங்களை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், குறிப்பாகக் காலத்திற்கேற்ப உலகளாவிய தெற்குப் பகுதிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் ரஷ்யா தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.