146 ஆண்டுகளுக்குப் பின் வரலாறு காணாத பனிப்பொழிவு... மாஸ்கோவை உலுக்கும் கடும் பனிப்புயல்!
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 146 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் வழக்கத்திற்கு மாறாகத் தாக்கிய இந்த எதிர்பாராத பனிப்புயலால் ஒட்டுமொத்த நகரமும் நிலைகுலைந்து போயுள்ளது. கடந்த 1880 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒரே நாளில் பதிவான அதிகபட்ச பனிப்பொழிவு இது என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரே இரவில் சுமார் 21 சென்டிமீட்டர் உயரத்திற்குப் பனி கொட்டித் தீர்த்ததால் சாலைகள் மற்றும் கட்டிடங்கள் அனைத்தும் வெள்ளைப் போர்வையால் போர்த்தப்பட்டது போல் காட்சியளிக்கின்றன.
இந்தத் திடீர் இயற்கைச் சீற்றத்தினால் ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பலத்த காற்றினால் மரங்கள் வேரோடு சாய்ந்ததில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து 76000-க்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இன்றித் தவித்து வருகின்றனர். சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதோடு, விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மின் விநியோகத்தைத் துரிதமாகச் சீரமைக்கும் பணியில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தற்போது போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மாஸ்கோ மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நகரில் உள்ள பூங்காக்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதோடு, வாடகை மிதிவண்டிகள் மற்றும் மின்சார வாகனங்களின் பயன்பாடும் பாதுகாப்புக் கருதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 48 மணி நேரத்திற்கு இந்தப் பனிப்பொழிவு நீடிக்க வாய்ப்புள்ளதால் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பருவநிலை மாற்றத்தின் காரணமாகவே இத்தகைய முன்னெப்போதும் இல்லாத வானிலை மாற்றங்கள் நிகழ்வதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.