இந்தியா சீனா எல்லைப் பிரச்சினையில் ரஷியா தலையிடாது... அதிபர் புதின் விளக்கம்!
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற உலகளாவிய செய்தி நிறுவனங்களின் தலைவர்களுடனான கலந்துரையாடலில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்றார். அப்போது இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லைப் பிரச்சினைகள் குறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகிய இரு தலைவர்களும் எல்லைப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்ப்பதில் உறுதியாக உள்ளதாக அவர் பாராட்டினார்.
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவு மிகவும் நுட்பமானது என்பதால், இரு நாடுகளின் இருதரப்பு விவகாரங்களில் ரஷியா ஒருபோதும் தலையிடாது என்று புதின் உறுதியளித்தார். சீனாவுடன் ரஷியா கொண்டுள்ள நெருக்கமான கூட்டணி உறவு, இந்தியாவுடன் வைத்துள்ள பிணைப்பை எந்த வகையிலும் பாதிக்காது என்றும், இரு நாடுகளுடனும் மாஸ்கோ தொடர்ந்து நட்புறவில் இருக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
பாதுகாப்புத் துறை குறித்துப் பேசிய புதின், ஐந்தாம் தலைமுறை எஸ்.யு.-57 போர் விமானங்களை கூட்டாக தயாரிப்பதற்கு இந்தியாவிடம் ரஷியா பரிந்துரைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். இராணுவத் துறையில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும், முக்கிய பாதுகாப்பு தளங்களுக்கான அதிநவீன தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு வழங்க ரஷியா என்றும் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.