உக்ரைனை உலுக்கிய ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல் - 8 பேர் பலி; 28 இடங்களில் பெரும் சேதம்!

 

ரஷ்யாவின் உள்நாட்டு எரிபொருள் சுத்திகரிப்பு ஆலைகளைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய தொடர் ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்யாவில் கடுமையான பெட்ரோல் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், அதற்குப் பழிவாங்கும் விதமாக உக்ரைன் தலைநகர் மீது ரஷ்ய ராணுவம் நேற்று இரவு முதல் இன்று காலை வரை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஒரு கொடூரமான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது அயர்லாந்து நாட்டுப் பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்துவிட்டுத் தாயகம் திரும்பிய சில மணி நேரங்களிலேயே இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. ரஷ்ய ராணுவம் தனது வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழித் தளங்களில் இருந்து அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா ட்ரோன்களை ஏவி ஒட்டுமொத்தக் கீவ் நகரையும் குறிவைத்துள்ளது.

விடிய விடியப் பல மணி நேரமாகக் கீவ் நகரின் 10 மாவட்டங்களிலும் பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்ட வண்ணம் இருந்ததால், பொதுமக்கள் தங்களது குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளுடன் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் தஞ்சம் புகுந்தனர்.


கீவ் நகர ராணுவ நிர்வாகத்தின் தலைவர் திமூர் தகாசென்கோ வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்தத் தாக்குதலில் இதுவரை 8 பேர் கொடூரமாக உயிரிழந்துள்ளனர். கீவ் நகரின் முக்கியப் பகுதிகள் மற்றும் மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகள் என மொத்தம் 28 இடங்களில் ரஷ்யாவின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் விழுந்து வெடித்துள்ளன. டெஸ்னியான்ஸ்கி மாவட்டத்தில் உள்ள 9 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று ஏவுகணை நேரிடையாகத் தாக்கியதில் இடிந்து தரைமட்டமானது.

ஷெவ்சென்கிவ்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையும், பல வணிக வளாகங்களும் இந்தத் தாக்குதலால் தீக்கிரையாகின. இதில் காயமடைந்தவர்களுக்கு உதவச் சென்ற அவசரக்கால மருத்துவப் பணியாளர் ஒருவர் உட்பட 34-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைனின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் பல ரஷ்ய ஏவுகணைகளை நடுவானிலேயே சுட்டு வீழ்த்திய போதிலும், சில ஏவுகணைகள் மற்றும் அவற்றின் சிதறல்கள் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்ததே இந்த மெகா சேதத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.