டெல்லி வந்தடைந்தார் ரஷ்ய அதிபர் புதின்... இன்று பிரதமர் மோடியுடன் சந்திப்பு!
இந்தியாவின் தலைமையில் டெல்லி பாரத் மண்டபத்தில் நாளை செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இன்று காலை டெல்லி வந்தடைந்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.
மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று காலை டெல்லி வந்தடைந்த ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இரு தலைவர்களும் முதற்கட்டமாக பிரிக்ஸ் மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்கள் குறித்தும், அதனைத் தொடர்ந்து இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.
பிரதமர் மோடி - புதின் சந்திப்பின்போது வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகள் சார்ந்த கூட்டு நடவடிக்கைகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்.யு.-57 ரக போர் விமானங்களை இந்தியா வாங்குவது தொடர்பாகவும் இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் தலைமையில் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பாரத் மண்டபத்தில் நடைபெறுகின்றன. மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ நிகழ்வுகளுக்கு முன்னதாக, இன்று அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதையொட்டி, டெல்லியில் ஜவகர்லால் நேரு மைதானம், ராஜ்காட், பாரத் மண்டபம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிரப் பாதுகாப்பு மற்றும் ஒத்திகை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.