ரஷிய நாடாளுமன்றத் தேர்தல்: அதிபர் புதினின் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி!
ரஷியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் புதினின் ஆளுங்கட்சியான ஐக்கிய ரஷிய கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
ரஷியாவில் கடந்த 18-ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தபால் வாக்குகள் உட்பட பதிவான வாக்குகளில் 95 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. மத்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அதிபர் புதினின் ஆளும் ஐக்கிய ரஷிய கட்சி 57.83 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இது கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெற்ற 49.8 சதவீத வாக்குகளை விட அதிகமாகும். மொத்தமுள்ள 450 இடங்களில், புதினின் கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
உக்ரைனுடன் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் போர் நீடித்து வரும் சூழலில் நடைபெற்ற இந்தத் தேர்தல், புதினின் ஆட்சிக்குச் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், எதிர்பார்த்தபடியே புதினின் கட்சி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இதனிடையே, ரஷியா மீது உக்ரைன் தரப்பிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் மாஸ்கோ நகரை நோக்கி ஏவப்பட்டவை முறியடிக்கப்பட்டாலும், இத்தாக்குதலில் முதியவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.