ஜம்மு - காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு!
எதிரி நாட்டுப் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை நடுவானிலேயே இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட ரஷ்யாவின் எஸ்-400 (S-400) வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை, ஜம்மு - காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் நிலைநிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது இந்தியாவின் 5-வது எஸ்-400 பாதுகாப்பு அமைப்பாகும்; வரும் பிப்ரவரி மாதத்திற்குள் இது முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு - காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் வான்வழி அச்சுறுத்தல்களைத் துல்லியமாகக் கண்காணித்து எதிர்கொள்ளும் வகையில், நவீன எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பை நிலைநிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நிலைநிறுத்தப்படும் இந்தப் புதிய வான் பாதுகாப்பு அமைப்பு, வரும் பிப்ரவரி மாதத்திற்குள் முழு அளவில் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் 4 எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளன.
தற்போது ஜம்மு - காஷ்மீரில் நிலைநிறுத்தப்பட உள்ள அமைப்பு இந்தியாவின் ஐந்தாவது எஸ்-400 தொகுப்பாகும். இது வடக்கு மற்றும் மேற்கு எல்லைப் பகுதிகளின் வான் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.