ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி...  விமானத்தில் இருமுடி கட்டு எடுத்துச் செல்ல மத்திய அரசு சிறப்பு அனுமதி!

 

 

சபரிமலை ஐயப்ப பக்தர்கள் விமானப் பயணத்தின்போது இருமுடி கட்டைக் கேபின் பேக்கேஜாக எடுத்துச் செல்ல தொடர்ந்து 3-வது ஆண்டாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை சிறப்பு அனுமதி அளித்துள்ளது. மண்டல மற்றும் மகர விளக்குப் பூஜை காலத்தை முன்னிட்டு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி வரை இந்தச் சிறப்பு அனுமதி அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, விமான நிலையங்களில் நடைபெறும் சிஐஎஸ்எஃப் (CISF) பாதுகாப்புச் சோதனைக்குப் பிறகு, நெய் தேங்காயுடன் கூடிய இருமுடியைத் தங்களது விமான இருக்கைக்கே பக்தர்கள் கையில் எடுத்துச் செல்லலாம்.

வழக்கமாக விமானப் பயணத்தின்போது தேங்காய் போன்ற பொருட்களைக் கேபின் பேக்கேஜில் எடுத்துச் செல்லக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐயப்ப பக்தர்களின் ஆன்மீக உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தத் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் இந்த அறிவிப்பு சபரிமலைக்குச் செல்லும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்களிடையே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது