சபரிமலையில் அரவணை பிரசாதத்திற்கு கடும் தட்டுப்பாடு - பக்தர்கள் ஏமாற்றம்!
சபரிமலை அய்யப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், பிரசித்தி பெற்ற அரவணை பிரசாதம் தயாரிப்பில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜைக்காக கடந்த 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்நிலையில், சிறப்புப் பூஜைகள் நிறைவடைந்து இன்று (திங்கட்கிழமை) இரவு நடை அடைக்கப்படுகிறது.
அரவணை உற்பத்தியில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக பக்தர்களின் தேவைக்கேற்ப விநியோகம் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. வழக்கமாக ஒரு பக்தருக்கு 3 டின் அரவணை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது ஒன்றாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதையும் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து பெறும் நிலையே உள்ளது.
அரவணை கவுண்ட்டர்களில் 24 மணி நேரமும் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழியும் நிலையிலும், பல பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் அரவணை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர். சபரிமலை வரலாற்றில் முதன்முறையாக அரவணை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அரவணை தயாரிப்பதற்கான புதிய மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாலும், புரட்டாசி மாத பூஜைக்கு எதிர்பாராத அளவில் பக்தர்கள் வருகை தந்ததாலும் இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் திருவிதாங்கூர் தேவஸ்தானம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக அரவணை தயாரிக்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மாநில தேவஸ்தானத்துறை அமைச்சர் முரளீதரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாத பூஜை காலங்களில் அரவணை உற்பத்தியை நிறுத்தி வைத்துவிட்டுப் புதிய மையம் அமைக்கும் பணியைச் செய்திருக்கக் கூடாது என்றும், தேவஸ்தானத்தின் சரியான திட்டமிடல் இன்மையே இதற்குக்காரணம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.