56 சவரன் சபரிமலை தங்கக் கிரீடம் மாயமா? தேவசம்போர்டு முக்கிய விளக்கம்! 

 

 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுமார் 55 பவுன் எடையுள்ள தங்கக் கிரீடம் மாயமானதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த கிரீடம் பாதுகாப்பாக இருப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.சபரிமலை சன்னிதானத்தில் உள்ள திருவாபரணங்களின் இருப்பு குறித்து ஆய்வு நடைபெற்று வரும் நிலையில், 2012-ம் ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கிய தங்கக் கிரீடம் தொடர்பாக சந்தேகம் எழுந்தது. இந்த கிரீடத்தின் எடை 445.78 கிராம் என பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆய்வின்போது அதே வடிவமைப்பில் மற்றொரு கிரீடம் இருப்பது கண்டறியப்பட்டதால், உண்மையான தங்கக் கிரீடம் காணவில்லை என்ற தகவல் வெளியானது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து தேவஸ்வம் வாரியத்திலும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், திருவாபரணம் ஆணையர் ரெஜிலால் கிரீடம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை நேரில் ஆய்வு செய்ததாகவும், உண்மையான தங்கக் கிரீடம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ததாகவும் தேவஸ்வம் வாரியத் தலைவர் கே.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கட்டுமானப் பணிகளின் காரணமாக பாதுகாப்பு அறையில் இருந்த சில பொருட்கள் மற்றொரு பாதுகாப்பு அறைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டதாகவும், அதே மாதிரியான மற்றொரு கிரீடம் அங்கு இருந்ததால் குழப்பம் ஏற்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதனால், “சபரிமலையில் தங்கக் கிரீடம் மாயம்” என்ற தகவல் தொடர்பான சந்தேகத்திற்கு தற்போது தேவஸ்வம் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. கிரீடம் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ள நிலையில், திருவாபரணங்களின் இருப்பு தொடர்பான ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சபரிமலையில் தங்கம் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்கள் தொடர்பாக ஏற்கனவே விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த கிரீடம் தொடர்பான தகவலும் கவனத்தை ஈர்த்துள்ளது.