சபரிமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்! பம்பையில் 24 மணி நேர மருத்துவக் கட்டுப்பாட்டு அறை திறப்பு

 

 

சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் அவசர மருத்துவத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கேரள சுகாதாரத்துறை சார்பில் பம்பையில் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதையொட்டி, பக்தர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை மேம்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பம்பை அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டுப்பாட்டு அறை, நவம்பர் 15-ம் தேதி முதல் ஜனவரி 21-ம் தேதி வரை தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு உதவும் வகையில், பல மொழிகள் பேசத் தெரிந்த பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவசர மருத்துவ உதவி தேவைப்படும் பக்தர்கள் 04735 203232 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். மேலும், சன்னிதானம், பம்பை, நிலக்கல் மற்றும் மலைப்பாதைகளில் உள்ள மருத்துவ மையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மாரடைப்பு உள்ளிட்ட அவசர பாதிப்புகளுக்கு முதலுதவி அளிக்கவும், மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் ஆம்புலன்ஸ் மற்றும் ஸ்ட்ரெச்சர் வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.