நீட் மாணவர்கள் போராட்டத்திற்கு சச்சின் டெண்டுல்கர் ஆதரவு!

 

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வில் நடைபெற்ற பல்வேறு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் போராட்டம் 34-வது நாளை எட்டியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் திரைப்பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கரும் போராட்டத்திற்குத் தனது ஆதரவைப் பதிவு செய்துள்ளார்.

மாணவர்களின் ஏமாற்றம் நியாயமானது என்று குறிப்பிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள உணர்ச்சிப்பூர்வமான பதிவில் , "என் தந்தை ஒரு பேராசிரியராக இருந்தார். அவர் எனக்கு ஆரம்பத்திலேயே கற்றுக் கொடுத்த ஒரு முக்கிய பாடம்: 'தேர்வில் தோல்வி அடைவதில் தவறில்லை, ஆனால் ஏமாற்றுவது மிகத் தவறு. ஒருபோதும் குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுக்காதீர்கள்.' உழைப்பை விட முடிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கும் ஒரு சமூகம், தகுதியின் அடிப்படையில் முன்னேறுவதை விடுத்து குறுக்கு வழிகளையே நாடத் தொடங்கும். தங்கள் கடின உழைப்பிற்கான உரிய அங்கீகாரம் கிடைக்காதபோது மாணவர்கள் ஏமாற்றமடைவது இயல்பானதே; அதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

இன்றைய இளம் இந்தியாவின் ஆற்றலையும் கனவுகளையும் சுட்டிக்காட்டிய சச்சின், நேர்மையான அமைப்பை உருவாக்க அனைவரும் இணைய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்: பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் மற்றும் நிர்வாகத்தினர் எனச் சமூகம் சார்ந்த அனைவரும், இளைஞர்கள் தொடர்ந்து ஊக்கத்துடனும் நேர்மையுடனும் செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளனர்.

கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும், நேர்மை ஊக்குவிக்கப்படும் மற்றும் தகுதிக்கு வெற்றி கிடைக்கும் ஒரு நல்ல கலாச்சாரத்தை நாம் உருவாக்க வேண்டும்.

நமது குழந்தைகளின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மற்றும் அவர்களின் லட்சியங்களைப் பாதுகாக்கும் சரியான தீர்வுகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து கண்டறிவோம் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது என சச்சின் அதில் குறிப்பிட்டுள்ளார்.