சதாம் உசேனின் ஆடம்பர விமானம் ஏலத்திற்கு: 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஈராக் அரசு அதிரடி அறிவிப்பு!
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் பயன்படுத்திய வி.ஐ.பி. விமானம் உட்பட இரண்டு போயிங் 747 விமானங்களை ஏலத்தில் விற்பனை செய்ய ஈராக் அரசு முடிவு செய்துள்ளது. 1991-ஆம் ஆண்டு வளைகுடா போரின்போது அமெரிக்கக் கூட்டுப் படைகளின் வான்வழித் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க இந்த விமானங்கள் துனிசியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
சர்வதேசத் தடைகள் மற்றும் சட்டச் சிக்கல்கள் காரணமாக கடந்த 35 ஆண்டுகளாக இந்த விமானங்கள் துனிசியாவிலேயே பயன்பாடின்றி முடங்கிக் கிடந்துள்ளன. படுக்கையறை, மாநாட்டு அறை உள்ளிட்ட ஆடம்பர வசதிகள் கொண்ட சதாம் உசேனின் விமானம் மற்றும் சரக்கு போக்குவரத்து விமானம் ஆகியவற்றை ஏலத்தில் விட ஈராக் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விமானங்களுக்குத் தலா 9 லட்சம் அமெரிக்க டாலர்கள் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் முன்பணமாக 1.8 லட்சம் அமெரிக்க டாலர்களை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.நீண்ட காலம் முடங்கிக் கிடக்கும் இந்த விமானங்களை யார் வாங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு உலக அளவில் எழுந்துள்ளது