தேர்வு நேரத்தில் சோகம்.. பொதுத்தேர்வுக்கு படித்து வந்த மாணவர் தற்கொலை!
தமிழகம் முழுவதும் இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் பொதுத்தேர்வுக்காக வீட்டில் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று காலை அஜித்குமாரின் பெற்றோர் வழக்கம்போல விவசாயப் பணிகளுக்காக வயலுக்குச் சென்றுள்ளனர். வீட்டில் தனியாக இருந்த அஜித்குமார், திடீரெனத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய பெற்றோர், கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அஜித்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
பதறிப்போன பெற்றோர் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தேர்வு பயம் காரணமாக இந்த முடிவை எடுத்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு இளம் உயிர் தேர்வுக்கு முன்னதாகவே பிரிந்தது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.