பெற்றோர்களே உஷார்... ஊக்கை விழுங்கிய ஒன்றரை வயது குழந்தை... போராடி மீட்ட மருத்துவர்கள்! 

 

 சின்னஞ்சிறு குழந்தைகளை வீட்டில் வைத்திருக்கும் பெற்றோர் மிகக் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை அவ்வப்போது நமக்கு சில சம்பவங்கள் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஒன்றரை வயதுக் குழந்தை  வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே தரையில் கிடந்த திறந்த ஊக்கை  விழுங்கி விட்டதாக தெரிகிறது.  இதனையடுத்து  குழந்தை தொடர்ந்து அழுதுவிட்டு வாந்தியும் எடுத்துள்ளது.  பெற்றோர் உடனடியாகக் குழந்தையை  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.   குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக எக்ஸ்ரே பரிசோதனை எடுத்தனர்.

எடுக்கப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனையில் திறந்த நிலையில் இருந்த பாதுகாப்பு ஊக்கு உணவுக்குழாயின் மேல் பகுதியில் சிக்கியிருப்பதைக் கண்டனர்.  கூர்மையான ஊக்கு என்பதால் மேலும் தாமதித்தால் குழந்தையின் உடலில் காயம் ஏற்படலாம் என்ற நிலை இருந்தது.  உடனடியாக  45 நிமிடங்களில் எண்டோஸ்கோப்பி எனப்படும் தொலைநோக்கி கருவி மூலம் ஊக்கை அகற்றினர்.  

ஊக்கு அகற்றப்பட்ட பின்னர் குழந்தை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில்   பாதுகாப்பாக வைக்கப்பட்டது. தற்போது குழந்தையின் உடல்நிலை முழுமையாகச் சீராக இருப்பதுடன் உணவு மற்றும் தண்ணீரையும்  சாப்பிடத்  தொடங்கியுள்ளது. இதனையடுத்து சிறிய குழந்தைகள் விளையாடும்போது நாணயம், ஊக்கு போன்ற பொருட்களை வாயில் வைக்க வாய்ப்புள்ளதால் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் . இதுபோன்ற அபாயகரமான பொருட்களைக் குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.