மேட்டூர் அணையில் பாதுகாப்பு குழுவினர் தீவிர ஆய்வு!

 

 

தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டம் 2021-ன் படி, அணைகளின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யத் தமிழக அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவினர், சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

மத்திய நீர்வள ஆணையத்தின் ஓய்வுபெற்ற தலைவர் சந்திரசேகர் அய்யர் தலைமையில் இந்த உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக நீர்வளத் துறையின் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் செல்வம், திருச்சி என்.ஐ.டி. கல்லூரியின் புவியியல் தொழில்நுட்ப வல்லுநர் முத்துக்குமரன் மற்றும் நீரியல் வல்லுநர் மஞ்சுளா ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். அணையின் பலம், முதன்மைச் சுவர்கள் மற்றும் கட்டுமான நிலைகள் விரிவாகச் சோதிக்கப்பட்டன.

நீர் வெளியேற்றும் மதகுகள் மற்றும் 16 கண் உபரிநீர் போக்கி பாலம்  ஆகியவற்றின் செயல்பாடு மற்றும் கையாளுதல் திறன்கள் ஆய்வு செய்யப்பட்டன. அணையின் மண் கரைப்பகுதிகள் மற்றும் அணை பாதுகாப்புக்காகப் பொருத்தப்பட்டுள்ள நவீன அளவீட்டுக் கருவிகள் ஆகியவை தரக்கட்டுப்பாட்டுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிபுணர் குழுத் தலைவர் சந்திரசேகர் அய்யர், அணையின் பாதுகாப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயார் செய்யப்பட்டுத் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.