மர்ம மரணமடைந்த இந்திய மாலுமியின் உடல் தாயகம் வருகை... இதயம், மூளை உட்பட முக்கிய உறுப்புகள் மாயம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் சௌஹான் என்பவர் வெளிநாட்டு கப்பல் ஒன்றில் மாலுமியாகப் பணியாற்றி வந்தார். இவர் வெனிசுவேலா நாட்டில் இருந்தபோது கடந்த மே மாதம் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்ததாகக் கப்பல் நிறுவனம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடலைத் தாயகம் கொண்டு வர அவரது குடும்பத்தினர் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துப் போராடி வந்தனர்.
மாலுமியின் உடல் ஒரு மாதத்திற்கும் மேலாக வெனிசுவேலாவில் குளிர்நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. அவரது மரணத்தில் சந்தேகம் இருந்ததால் இந்தியாவில் அவரது உடலை மீண்டும் உடற்கூராய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். அப்போது ராகேஷ் சௌஹானின் உடலில் இதயம், மூளை, நுரையீரல், கணையம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் என எந்தவொரு முக்கிய உறுப்புகளும் இல்லாததைக் கண்டு மருத்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
மரணமடைந்த மாலுமியின் உடலில் உறுப்புகள் அனைத்தும் முழுமையாக மாயமாகி இருப்பது அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. வெனிசுவேலா அரசு உடற்கூராய்வு முடிவுகள் எதையும் முறையாக வெளியிடாமல் உடலை மட்டும் அனுப்பியதால் இதில் பெரிய சதி இருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர். இது குறித்து மத்திய அரசு வெனிசுவேலா தூதரகத்தைத் தொடர்புகொண்டு உரிய விளக்கம் கேட்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட ராகேஷின் குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.