வீட்டு வாசலில் தூங்கிய திமுக நிர்வாகி வெட்டிக்கொலை... பெரும் பரபரப்பு!
சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளையூர் மேற்குகாடு பகுதியைச் சேர்ந்த 56 வயது மாணிக்கம் என்பவர், சேலம் கிழக்கு மாவட்ட திமுகவில் பிரதிநிதியாகப் பொறுப்பு வகித்து வந்தார். இவரது முதல் மனைவி பொன்மலர் சில வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில், மாணிக்கம் இரண்டாவதாக இந்திரா என்ற பெண்ணைத் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இவருக்கு உதயபிரகாஷ், சூரியபிரகாஷ் மற்றும் செல்வபிரகாஷ் என 3 மகன்கள் உள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவு மாணிக்கம் தனது வீட்டுக்கு வெளியில் கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.
நேற்று அதிகாலை அவரது மனைவி இந்திரா வீட்டின் கதவைத் திறந்தபோது, வெளியில் மாணிக்கம் உடலில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அலறியுள்ளார். இக்கொலைச் சம்பவம் குறித்துத் தகவலறிந்து வீரகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நிலையில், கொலையாளிகளைக் கைது செய்யும் வரை சடலத்தை எடுக்க விடமாட்டோம் எனக் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கொலையாளிகளை விரைந்து பிடிக்கப் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை ஆத்தூர் அடுத்த புளியங்குறிச்சியைச் சேர்ந்த மஞ்சப்பன் மகனான கம்பி கட்டும் தொழிலாளி 28 வயது ராஜ்குமார் என்பவர், ஆத்தூர் 2 வது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன் திடீரென சரணடைந்தார். திமுக நிர்வாகி மாணிக்கத்தைத் தானே வெட்டிப் படுகொலை செய்ததாக அவர் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளதைத் தொடர்ந்து, அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். திமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதற்கான உண்மைப் பின்னணி மற்றும் முன்விரோதக் காரணங்கள் குறித்து வீரகனூர் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.