மீண்டும் பரபரப்பு... சிறையில் இருந்து வந்த ஒரே வாரத்தில் தவெக பிரமுகர் பாலியல் வழக்கில் கைது!
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த தவெக பிரமுகரும் மளிகைக் கடை உரிமையாளருமான மணிகண்டன் (39) மீது பாலியல் புகார்கள் குவிந்துள்ளன. பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் ஏற்கனவே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், கடந்த 16-ஆம் தேதிதான் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் பள்ளப்பட்டியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர், மணிகண்டன் மீது சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புதிய புகார் அளித்துள்ளார். தன்னை நிர்வாணமாகப் படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதாகவும், கணவரைப் பிரிந்து தன்னுடன் வருமாறு அச்சுறுத்துவதாகவும் அந்த இளம்பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட சூரமங்கலம் மகளிர் காவல் ஆய்வாளர் கவிதா, மணிகண்டனை அதிரடியாக மீண்டும் கைது செய்தார். அவரிடமிருந்த அலைபேசியைக் கைப்பற்றிய காவல் துறையினர், அதில் உள்ள தகவல்கள் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக மணிகண்டனிடம் அந்த இளம்பெண் பல லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்ததாகவும், அதனைக் கேட்கச் சென்றபோது தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டு வருகிறது. சம்பவத்தின் போது இளம்பெண்ணின் வீட்டில் இருந்த மேலும் 3 நபர்கள் யார் என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த ஒரே வாரத்தில் தவெக பிரமுகர் மீண்டும் பாலியல் வழக்கில் சிக்கி கைதாகியுள்ளது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மின்னணுப் சாதனங்கள் கோவைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய கைதும் நடந்துள்ளது. இந்த வழக்கில் பல ரகசியங்கள் புதைந்து கிடப்பதாகத் தெரிவித்துள்ள காவல் துறையினர், தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.