சிங்கப்பெண்களுக்கு சல்யூட்... தீப்பற்றி எரிந்த பிரசவ வார்டில் 9 குழந்தைகளைக் காப்பாற்றிய செவிலியர்கள்!
மகாராஷ்டிராவில் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், சிறிதும் பதற்றமின்றிச் செயல்பட்டுப் புதிதாகப் பிறந்த 9 பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய செவிலியர்களின் வீரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சத்ரபதி சாம்பாஜிநகரின் ஆகாஷ்வானி பகுதியில் அமைந்துள்ள ஆசியன் மருத்துவமனையின் பிரசவ வார்டில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மின்கசிவு காரணமாக திடீரெனத் தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவெனப் பரவிய நிலையிலும் சிறிதும் பதற்றமடையாத செவிலியர்கள், வார்டில் இருந்த 9 பச்சிளம் குழந்தைகளையும் உடனடியாக மீட்டுப் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றினர்.
பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்றியதுடன், ஐசியூ உள்ளிட்ட பிரிவுகளில் சிகிச்சையில் இருந்த 58 நோயாளிகளையும் உடனடியாக உஷார்படுத்தி அங்கிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.
இது குறித்து தகவலறிந்தவுடன் 3 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்த வீரர்கள் போராடித் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை. உயிரைப் பணையம் வைத்துப் பிஞ்சுக் குழந்தைகளைக் காப்பாற்றிய செவிலியர்களின் செயலுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.