விவசாயிகளுக்கு குட் நியூஸ்! சம்பா பயிர் காப்பீடு செய்ய டிசம்பர் 1 வரை அவகாசம் நீட்டிப்பு!
சென்னை: தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, சம்பா நெல் பயிர்களுக்கான காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை டிசம்பர் 1-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது சம்பா பருவ நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. இயற்கை இடர்பாடுகள் மற்றும் எதிர்பாராத பருவநிலை மாற்றங்களால் பயிர்கள் பாதிக்கப்படும்போது விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கும் வகையில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, நடப்பு பருவத்தில் சம்பா பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாளாக நவம்பர் 15-ம் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், விவசாயிகளுக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து, காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை டிசம்பர் 1-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் இன்னும் பயிர்களுக்கு காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, விவசாயிகள் தங்களுக்குத் தேவையான ஆவணங்களுடன் அருகிலுள்ள இ-சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகி காப்பீடு செய்துகொள்ளலாம்.கடைசி நேர நெரிசலைத் தவிர்த்து, விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.