தமிழக காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராக சந்தீப் மிட்டல் நியமனம்!
தமிழக காவல்துறையில் நிர்வாக நலன் மற்றும் பணியிட மேம்பாடு கருதி, காவல்துறை உயர்தரப் பொறுப்புகளில் உள்ள முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநிலத்தின் மிக முக்கியத் தேர்வு வாரியங்களில் ஒன்றான தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்குப் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறையின் ஆயுதப்படை பிரிவு டிஜிபியாகபணியாற்றி வரும் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான டாக்டர் சந்தீப் மிட்டல், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 1995ஆம் ஆண்டு ஐபிஎஸ் கேடரைச் சேர்ந்த சந்தீப் மிட்டல், சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு உட்படப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து, சிறந்த நிர்வாகத் திறனை நிரூபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களில் காவலர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட சீருடைப் பணியிடங்களுக்கான தேர்வுகளைத் திட்டமிட்டு நடத்தும் முக்கியப் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சந்தீப் மிட்டலின் இடமாற்றத்தைத் தொடர்ந்து, காலியாக உள்ள ஆயுதப்படைப் பிரிவின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக மூத்த அதிகாரி தினகரன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் டிஜிபியாகப் பணியாற்றி வரும் சீமா அகர்வால் ஐபிஎஸ் அவர்களுக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் தனது தற்போதைய பொறுப்புடன், தீயணைப்பு ஆணையத்தின் தலைவர் பதவியையும் கூடுதலாகக் கவனிப்பார் எனத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.