இன்று புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் பதவியேற்பு - திமுகவுக்கு பின்னடைவா? யார் இந்த சந்தீப் ராய் ரத்தோர்?!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், மாநிலக் காவல்துறையின் உச்சகட்ட அதிகார அமைப்பையே தேர்தல் ஆணையம் ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்துள்ளது. தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் இன்று காலை 11 மணியளவில் பொறுப்பேற்கிறார்.
கடந்த சில நாட்களாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது பிரசாரங்களுக்குக் காவல்துறை அனுமதி மறுப்பதாகவும், ஆளுங்கட்சிக்குச் சாதகமாகச் சில அதிகாரிகள் செயல்படுவதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி வந்தார். குறிப்பாக, பெரம்பூர் மற்றும் திருச்சி பிரசாரங்களின் போது ஏற்பட்ட சிக்கல்கள் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் குவிந்தன.
இதனைத் தொடர்ந்து, "சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்" நடைபெறுவதை உறுதி செய்ய, இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று மாலை அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது.
யார் இந்த சந்தீப் ராய் ரத்தோர்?
1992-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான இவர், ஏற்கனவே சென்னை மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது டிஜிபி அந்தஸ்தில் உள்ள இவர், மிகவும் கண்டிப்பான அதிகாரி எனப் பெயரெடுத்தவர். தேர்தல் முடியும் வரை தமிழகக் காவல்துறையின் முழு அதிகாரமும் இவரது கட்டுப்பாட்டில் இருக்கும்.
டிஜிபி மட்டுமல்லாமல், மிக முக்கியமான பொறுப்புகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் மாற்றப்பட்டு, சஞ்சய் குமார் புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை கமிஷனர் அபிஷேக் தீட்சித் மதுரை மாநகரக் காவல் ஆணையராக நியமனம். மேற்கு மண்டல ஐஜி கோயம்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்ட மேற்கு மண்டல ஐஜியாக ரம்யா பாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.
விஜய் ஆதரவாளர்கள் உற்சாகம்:
தங்கள் தலைவரின் புகாருக்கு உடனடித் தீர்வு கிடைத்துள்ளதாகத் தவெக தொண்டர்கள் இதனைச் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். "ஜனநாயகக் கடமையைச் சரியாகச் செய்ய விடாமல் தடுத்தவர்களுக்கு இது ஒரு பாடம்" என அக்கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆளுங்கட்சியான திமுக-வுக்கு இந்தத் திடீர் மாற்றங்கள் சற்று பின்னடைவாகப் பார்க்கப்பட்டாலும், "தேர்தல் ஆணையத்தின் முடிவை நாங்கள் மதிக்கிறோம்" என அமைச்சர் கே.என்.நேரு ஏற்கனவே தெரிவித்துள்ளார். இன்று புதிய டிஜிபி பதவியேற்றவுடன், தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் இன்னும் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இன்று காலை 11 மணிக்கு பதவியேற்கிறார். டிஜிபி ஜி.வெங்கட்ராமன் எதிர்க்கட்சிகளின் புகார் மற்றும் தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சையான நடவடிக்கை காரணமாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.