முதல்வரைச் சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் - 7வது நாளாகச் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

 

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் தங்களது பல்வேறு கட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி ரிப்பன் மாளிகை வளாகத்தில் தொடர்ந்து 7-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களை உடனடியாகக் காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சென்னை மாநகராட்சியின் மீதமுள்ள மண்டலங்களிலும் தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தினக்கூலி மற்றும் மாத ஊதியத்தை உயர்த்த வேண்டும்.

"அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தைகளில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. எனவே, தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து உறுதிமொழி பெறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை" எனப் போராட்டக் குழுவினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை 100 நாட்கள் ஆனாலும் போராட்டத்தை அறவழியில் தொடர்ந்து நடத்தத் தயங்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்திலேயே தூய்மைப் பணியாளர்கள் இரவிலும் தங்கிப் போராடி வருவதால், மாநகராட்சிப் பகுதியில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.