அடக்கொடுமையே.... 10 புடவைகளுக்காகப் பெற்ற மகளையே விற்ற கொடூரத் தாய்!
உத்தரப் பிரதேசத்தில் வெறும் 10 புடவைகள் மற்றும் 16 ஆயிரம் ரூபாய் பணத்திற்காகப் பெற்ற தாயே தனது சொந்த மகளை விற்ற கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் அர்வல் பகுதியைச் சேர்ந்த கவுரி தேவி என்ற அந்தத் தாய், தனது 12 வயது மகளை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த லஹ்ரு யாதவ் (40) என்பவரிடம் பணத்திற்காக விற்றுள்ளார். கான்ட்ராக்டராக வேலை செய்யும் லஹ்ரு யாதவ் ஏற்கனவே முதல் மனைவி இறந்து இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அந்தச் சிறுமியை வாரணாசியில் உள்ள ஒரு கோயிலில் வைத்து கட்டாயத் திருமணம் செய்து கொண்டார்.
அங்கு நான்கு மாதங்களாக அந்தச் சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, வீட்டு வேலை செய்யாத போது அவரை அடித்தும் கொடூரமாகத் துன்புறுத்தி வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, கடந்த 19ம் தேதி அந்தச் சிறுமியைப் பிரதமர் மோடியின் தொகுதிக்கு உட்பட்ட வாரணாசி ரயில் நிலையத்தில் எவ்வித இரக்கமுமின்றித் தவிக்கவிட்டுவிட்டு அவர் தப்பியோடினார். இந்நிலையில், ரயில் நிலையத்தில் தனியாக அழுதுகொண்டிருந்த அந்தச் சிறுமியை மீட்ட ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரவி வர்மா, உதவி செய்வதாகக் கூறி சாரநாத் குளம் அருகே அழைத்துச் சென்று மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் அவரை பகடியா பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அந்த ஆட்டோ டிரைவர் அழைத்துச் சென்ற நிலையில், அங்கு சந்தேகமடைந்த அண்டை வீட்டார் சாரநாத் போலீசாருக்கு அவசரத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அசுர வேகத்தில் விரைந்து வந்த போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியைப் பத்திரமாக மீட்டு, ஆட்டோ டிரைவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தாயால் விற்கப்பட்டு அடுத்தடுத்து இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த 12 வயது சிறுமியின் அவல நிலை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.