புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் வெற்றி... விண்ணில் செலுத்தி சீனா சாதனை!
சீனா தனது விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களின் ஒரு பகுதியாகப் புதிய தகவல் தொடர்பு சோதனை செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. அந்நாட்டின் ஷான்சி மாகாணத்தில் அமைந்துள்ள தையுவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து இந்தச் செயற்கைக்கோள்கள் நேற்றைய தினம் ஏவப்பட்டன. சக்திவாய்ந்த 'லாங் மார்ச்-6' ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்தச் செயற்கைக்கோள்கள் திட்டமிடப்பட்ட சுற்றுவட்டப்பாதையில் துல்லியமாகச் சென்று சேர்ந்தன.
விண்ணில் செலுத்தப்பட்டுள்ள இந்த அதிநவீன செயற்கைக்கோள்கள் அதிவேக தகவல் தொடர்பு மற்றும் தரவு பரிமாற்றச் சேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவைகளை வலுப்படுத்தவும் புதிய தொழில்நுட்பச் சோதனைகளை மேற்கொள்வதற்கும் இவை பெரிதும் பயன்படும். சீனா விண்வெளித் துறையில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் நிலையில் இந்த வெற்றியும் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த வெற்றிப் பயணத்தின் மூலம் சீனா விண்வெளி ஆராய்ச்சியில் தனது அடுத்தகட்ட மைல்கல்லை எட்டியுள்ளதாகக் கருதப்படுகிறது. இது 'லாங் மார்ச்' ராக்கெட் வரிசையில் மேற்கொள்ளப்பட்ட 660-வது வெற்றிகரமான விண்வெளிப் பயணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் விண்வெளித் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் சீனா, இந்த புதிய செயற்கைக்கோள் ஏவுதலின் மூலம் தனது தகவல் தொடர்பு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.