சாத்தான்குளம் வழக்கு.. 2020 முதல் 2026 வரை கடந்து வந்த பாதை - ஒரு பார்வை!
சாத்தான்குளம் செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் காவலில் கொல்லப்பட்ட வழக்கில், நீதிக்கான பயணம் இன்று ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது.
2020: கருப்பு ஜூன் மற்றும் தொடக்கக்கட்ட அதிர்வுகள்
ஜூன் 19: ஊரடங்கு விதிகளை மீறியதாகக் கூறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரைச் சாத்தான்குளம் போலீசார் கைது செய்து, காவல் நிலையத்தில் வைத்து விடிய விடியக் கொடூரமாகத் தாக்கினர்.
ஜூன் 20: பலத்த காயங்களுடன் இருவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது.
ஜூன் 22 & 23: சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பென்னிக்ஸ் ஜூன் 22-லும், தந்தை ஜெயராஜ் ஜூன் 23-லும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.
2020: விசாரணைப் பரிமாற்றம்
ஜூலை - ஆகஸ்ட்: உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வழக்கு முதலில் சிபிசிஐடி (CB-CID) வசம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் சிபிஐ (CBI) வசம் மாற்றப்பட்டது.
கைது: ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
2021 - 2025: நீண்ட நெடிய சட்டப் போராட்டம்
குற்றப்பத்திரிகை: சிபிஐ சுமார் 2,000 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஜாமீன் மறுப்பு: குற்றம் சாட்டப்பட்ட போலீசார் பலமுறை ஜாமீன் கோரியும், வழக்கின் தீவிரத்தைக் கருதி நீதிமன்றம் தொடர்ந்து ஜாமீனை மறுத்து வந்தது.
2026: தீர்ப்பு மற்றும் தண்டனை அறிவிப்பு
மார்ச் 23: மதுரை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம், ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசாரும் "குற்றவாளிகள்" என அதிரடித் தீர்ப்பளித்தது. (சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை விசாரணையின் போது உயிரிழந்ததால், மற்ற 9 பேர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது).
ஏப்ரல் 2 - 3: தண்டனை விவரங்கள் குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யக் கால அவகாசம் கோரிய நிலையில், ஏப்ரல் 3-ம் தேதி "பாரபட்சமின்றி அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்" என மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்தது.
ஏப்ரல் 6 (இன்று): இன்று காலை அறிவிக்கப்பட வேண்டிய தண்டனை விவரங்கள், மதியம் 3:30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.