மீண்டும் தள்ளிப்போன சாத்தான்குளம் தீர்ப்பு... மாலை 5:30 மணிக்கு தண்டனை விவரம் அறிவிப்பு - 9 போலீசாருக்கு காத்திருக்கும் 'உச்சகட்ட' தண்டனை!

 

தமிழகமே ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கின் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுவதில் மீண்டும் ஒரு மணி நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணிக்கு அறிவிக்கப்படவிருந்த தண்டனை விவரம், முதலில் மதியம் 3:30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கிடைத்துள்ள சமீபத்திய தகவலின்படி, இந்த அறிவிப்பு மீண்டும் தள்ளிப்போய் இன்று மாலை 5:30 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 போலீசாருக்கான தண்டனை விவரங்களை இறுதி செய்வதிலும், அரசுத் தரப்பு சமர்ப்பித்த அறிக்கைகளை ஆய்வு செய்வதிலும் கூடுதல் நேரம் தேவைப்படுவதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கில் குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசாருக்கும், சட்டப்படி வழங்கப்பட வேண்டிய அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இது குற்றவாளிகள் தரப்பில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தண்டனை விவரம் மாலை 5:30 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளதால், மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஜெயராஜின் குடும்பத்தினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே திரண்டுள்ளனர்.