சனி, ஞாயிறு விடுமுறை... தமிழகம் முழுவதும் 1,635 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

 

வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டுப் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் தடையின்றிப் பயணம் செய்ய ஏதுவாக, சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து 1,635 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக ஜூலை 24ம் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் ஜூலை 25 சனிக்கிழமை ஆகிய நாட்களில் சென்னையின் நைத்து பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட தென் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை 395 பேருந்துகளும், சனிக்கிழமை 330 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து  திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இரு நாட்களிலும் தலா 120 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் ஆகிய இடங்களுக்கு இரு நாட்களிலும் தலா 25 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதே போன்று பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில் இருந்து பிற இடங்களுக்குப் பயணம் செய்ய 200 சிறப்புப் பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன.

வார இறுதி விடுமுறை முடிந்து ஜூலை 26 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பொதுமக்கள் மீண்டும் சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களுக்குத் திரும்ப வசதியாக, பல்வேறு ஊர்களில் இருந்து 420 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கடைசி நேரக் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், தங்குதடையற்ற பயணத்திற்கும் பயணிகள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (www.tnstc.in) அல்லது செயலி (Mobile App) மூலமாக முன்கூட்டியே பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.