undefined

குருவின் வீட்டிற்கு செல்லும் சனி பகவான்... சனிப்பெயர்ச்சி யார் யாருக்கு சாதகமாக இருக்கும்?! முழு பலன்கள்!

 

இந்த ஆண்டு நிகழவிருக்கும் சனிப்பெயர்ச்சி, ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி, சனி பகவான் வரும் மார்ச் 6ம் தேதி (மாசி 22, வெள்ளிக்கிழமை) அன்று காலை 8:24 மணிக்குத் தனது சொந்த வீடான கும்ப ராசியிலிருந்து வெளியேறி, குருவின் வீடான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

பொதுவான பரிகாரம்:
சனி பகவானின் தாக்கம் குறையச் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். முடிந்தவரை ஏழை எளியவர்களுக்கும், ஊனமுற்றோருக்கும் அன்னதானம் செய்வது சனி பகவானின் அருளைப் பெற்றுத்தரும்.

மேஷம்:

மேஷ ராசிக்கு 12-ஆம் இடமான மீனத்திற்குச் சனி பகவான் செல்வதால் 'விரய சனி' (ஏழரை சனியின் ஆரம்பம்) தொடங்குகிறது. சுபச் செலவுகள் அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடும். முதலீடுகளில் அதிகக் கவனம் தேவை.

ரிஷபம்:
ரிஷப ராசிக்கு 11-ஆம் இடமான லாப ஸ்தானத்திற்குச் சனி வருகிறார். இது ஒரு பொற்காலமாகும். பொருளாதார நிலை உயரும், நிலுவையில் இருந்த பணங்கள் கைக்கு வரும். வேலையில் பதவி உயர்வு மற்றும் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

மிதுனம்:
மிதுன ராசிக்கு 10-ஆம் இடமான கர்ம ஸ்தானத்திற்குச் சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். வேலைப் பளு அதிகரித்தாலும், உங்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் உண்டு.

கடகம்:
உங்களுக்கு அஷ்டம சனி முடிந்து, 9-ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்குச் சனி செல்கிறார். நீண்ட காலத் தடைகள் விலகும். தந்தை வழியில் நன்மைகள் உண்டாகும். ஆன்மிகப் பயணங்கள் மற்றும் புனித யாத்திரைகள் மேற்கொள்வீர்கள்.

சிம்மம்:
சிம்ம ராசிக்கு 8-ஆம் இடமான அஷ்டம சனி தொடங்குகிறது. உடல்நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். அதே சமயம் விபரீத ராஜயோகத்தால் சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட லாபங்கள் கிடைக்கக்கூடும்.

கன்னி :
கன்னி ராசிக்கு 7-ஆம் இடமான களத்திர ஸ்தானத்திற்குச் சனி வருகிறார் (கண்டகச் சனி). கூட்டாளிகளுடன் (Partners) சிறு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நீண்ட நாட்களாகத் தடைபட்டிருந்த திருமணங்கள் தற்போது கைகூடும்.

துலாம்:
துலாம் ராசிக்கு 6-ஆம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்குச் சனி பகவான் செல்வது ஒரு சிறந்த யோகமாகும். எதிரிகள் ஒழிவர், நோய்கள் நீங்கும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்கு 5-ஆம் இடமான பஞ்சம ஸ்தானத்திற்குச் சனி வருகிறார். இது 'பஞ்சம சனி' காலமாகும். பிள்ளைகளின் கல்வி மற்றும் முன்னேற்றத்தில் கவனம் தேவை. பூர்விகச் சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்புண்டு.

தனுசு:
தனுசு ராசிக்கு 4-ஆம் இடமான சுக ஸ்தானத்திற்குச் சனி செல்வதால் இது 'அர்த்தாஷ்டம சனி' காலம். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு அல்லது வாகன மாற்றங்கள் ஏற்படலாம். வேலை நிமித்தமாக அலைச்சல்கள் இருக்கும்.

மகரம்:
மகர ராசிக்கு ஏழரை சனி முழுமையாக முடிந்து, 3-ஆம் இடமான வீரிய ஸ்தானத்திற்குச் சனி வருகிறார். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை கூடும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி காண்பீர்கள்.

கும்பம்:
கும்ப ராசிக்கு 'பாத சனி' (ஏழரை சனியின் கடைசி கட்டம்) தொடங்குகிறது. பேச்சில் நிதானம் தேவை. பணவரவு திருப்திகரமாக இருந்தாலும், சேமிப்பு குறையலாம். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

மீனம்:
மீன ராசிக்கு 'ஜென்ம சனி' (ஏழரை சனியின் இரண்டாம் கட்டம்) தொடங்குகிறது. அதிகப் பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். எதிலும் நிதானமாகச் செயல்படுவது நல்லது. திட்டமிட்டு உழைத்தால் மட்டுமே வெற்றியை எட்ட முடியும்.