ஏமனில் சவுதி வான்வழித் தாக்குதல்... 22 பேர் பலி; 30 பேர் படுகாயம்!

 

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள ஏமனில், சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய கிழக்கு நாடான ஏமனில் அதிபர் தலைமையிலான அரசுப் படைகளுக்கும், ஹவுதி  கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாகக் கடுமையான உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் ஏமன் அரசுப் படைகளுக்கு ஆதரவாகச் சவுதி அரேபியத் தலைமையிலான கூட்டுப் படைகளும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ஈரானும் செயல்பட்டு வருகின்றன.

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளையும் தலைநகர் சனாவையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில், அவர்கள் மீது சவுதி கூட்டுப் படைகள் அவ்வப்போது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஏமன் தலைநகர் சனாவுக்கு அருகே அமைந்துள்ள அல்-ஷரியா  பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகளைக் குறிவைத்துச் சவுதி கூட்டுப் படைகளின் போர் விமானங்கள் திடீர் வான்வழித் தாக்குதலைத் தொடுத்தன.

குடியிருப்பு மற்றும் கிளர்ச்சியாளர்களின் முகாம்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த பயங்கரக் குண்டுவீச்சில் 22 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த வான்வழித் தாக்குதலால் ஏமன் பகுதியில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.