ஹவுதிகளின் தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ரேலின் உதவியை நாடிய சவுதி அரேபியா!

 

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் எண்ணெய் கட்டமைப்பு மற்றும் முக்கிய நகரங்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில், பாதுகாப்பைப் பலப்படுத்த இஸ்ரேலின் உதவியை சவுதி அரேபியா நாடியுள்ளது.

அமெரிக்காவின் மத்தியப் பிராந்தியக் கட்டளையகமான 'சென்ட்கோம்' மத்தியஸ்தம் மூலம் சவுதி அரேபியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதன் அடிப்படையில், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ராணுவ நகர்வுகள் மற்றும் கட்டமைப்புகள் குறித்த உளவுத் தகவல்களைச் சவுதிக்கு வழங்க இஸ்ரேல் முன்வந்துள்ளது.

ஹவுதிகளின் தொடர் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் சவுதியின் எண்ணெய் குழாய்கள் மற்றும் கச்சா எண்ணெய் கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாப் எல்-மந்தேப் கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த உளவுத் தகவல்கள் சவுதிக்கு அவசியமானதாகியுள்ளது.

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு மற்றும் துல்லியமான உளவுத் திறன்கள் ஹவுதிகளின் அச்சுறுத்தலைச் சமாளிக்க உதவும் என்ற நோக்கில் சவுதி தரப்பு இந்த நகர்வை எடுத்துள்ளதாக பிராந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.