சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வாலிபரை 34 கோடி ரூபாய் கொடுத்து மீட்ட கேரள மக்கள்!
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் கடந்த 2006ஆம் ஆண்டு ஓட்டுநர் வேலைக்காகச் சவுதி அரேபியா நாட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவனைப் பராமரிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ஒரு விபத்தில் அந்தச் சிறுவன் உயிரிழந்தான். இந்தச் சம்பவத்தால் சவுதி அரேபிய காவல்துறையினரால் அப்துல் ரஹீம் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு நீதிமன்றத்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்ட அவரைத் தூக்கு மேடையில் இருந்து காப்பாற்ற வேண்டுமானால், இந்திய மதிப்பில் சுமார் 34 கோடி ரூபாயை இழப்பீட்டுத் தொகையாகச் செலுத்த வேண்டும் என்று சவுதி நீதிமன்றம் தெரிவித்தது. ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீமின் குடும்பத்தாரால் அவ்வளவு பெரிய தொகையைத் திரட்ட முடியாத சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில், உலகெங்கும் வாழும் கேரள மக்கள் ஒன்றிணைந்து சமூக வலைதளங்கள் மூலம் மிகக் குறுகிய காலத்திலேயே 34 கோடி ரூபாய் நிதியைத் திரட்டி நீதிமன்றத்தில் செலுத்தினர்.
இதன் விளைவாக அப்துல் ரஹீமுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை முழுமையாக ரத்து செய்யப்பட்டு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சவுதி சிறையில் இருந்து விடுதலை பெற்ற அவர், பக்ரீத் பண்டிகை தினத்தில் தனது சொந்த ஊரான கேரளாவுக்குத் திரும்பினார். விமான நிலையத்தில் திரண்டிருந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது தாயைக் கட்டிப்பிடித்து அவர் கண்ணீர் வடித்த காட்சி அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.