வருடத்திற்கு ரூ.6,000 உதவித்தொகை... பிஎம் கிசான் திட்டத்தில் புதிய பயனாளிகள் விண்ணப்பிப்பது எப்படி?! 

 

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் பிஎம் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், வரும் ஜூலை மாதம் வழங்கப்படவுள்ள தவணைத் தொகையைப் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் பிஎம் கிசான் திட்டத்தில் புதிதாகச் சேர விரும்பும் விவசாயிகள், 'டிஜிட்டல் உழவர் அடையாள அட்டை' வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விவசாயத் துறையில் டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்கவும், தகுதியான விவசாயிகளுக்கு மட்டுமே நிதி உதவி சென்று சேருவதை உறுதி செய்யவும் இந்த 'அக்ரிஸ்டாக்' தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்று வரும் விவசாயிகளுக்கு இந்தத் தவணைத் தொகை வழக்கம்போல அவர்களது வங்கித் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். எனினும், எதிர்காலத்தில் இவர்களும் டிஜிட்டல் கார்டுக்கு மாற வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பயனாளிகள் கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றி டிஜிட்டல் அடையாள அட்டையைப் பெறலாம்: மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அக்ரிஸ்டாக் இணையதளத்திற்குச் செல்லவும். உங்களது ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணைப் பயன்படுத்திப் பதிவு செய்யவும். நில விபரங்கள், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அடையாளச் சான்றுகளைப் பதிவேற்ற வேண்டும்.

பதிவேற்றப்பட்ட விபரங்கள் வேளாண் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட பிறகு, உங்களுக்கான பிரத்யேக டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும்.

ஆண்டுக்கு ரூ. 6,000 நிதி உதவியை மூன்று தவணைகளாக (தலா ரூ. 2,000) மத்திய அரசு வழங்கி வருகிறது. 2026-ஆம் ஆண்டின் இரண்டாவது தவணைத் தொகை வரும் ஜூலை மாதம் விடுவிக்கப்பட உள்ளது. இதற்கு முன்னதாகவே புதிய பயனாளிகள் தங்களது பதிவை உறுதி செய்து கொள்வது அவசியம்.