ஆட்டோ மீது பள்ளி பேருந்து மோதி விபத்து... 12 வயது மாணவி சக்கரத்தில் நசுங்கி பலி!
வடமேற்கு டெல்லியில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது தனியார் பள்ளி பேருந்து ஒன்று பயங்கரமாக மோதிய விபத்தில், 12 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
டெல்லி முகுந்த்பூரின் ராமா கார்டன் பகுதியைச் சேர்ந்த பிரியான்ஷி (12) என்ற சிறுமி, வழக்கம் போலத் தனது சகோதரி மற்றும் அருகில் உள்ள பிற குழந்தைகளுடன் ஆட்டோவில் பள்ளிக்குப் புறப்பட்டுள்ளார். அவர்களது ஆட்டோ மஜ்லிஸ் பார்க் மெட்ரோ நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக ஆட்டோவின் மீது பலமாக மோதியது.
பேருந்து மோதிய வேகத்தில், ஆட்டோவின் ஓரத்தில் அமர்ந்திருந்த சிறுமி பிரியான்ஷி நிலைதடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டார். அப்போது, பின்னால் வந்த அதே பள்ளிப் பேருந்தின் பின்சக்கரம் சிறுமியின் உடல் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கிப் பலத்த காயமடைந்த சிறுமியை, அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு ஜஹாங்கீர்புரியில் உள்ள பாபு ஜெகஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். நல்வாய்ப்பாக, ஆட்டோவில் பயணித்த சிறுமியின் சகோதரி உட்படப் பிற குழந்தைகளுக்கு எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்த ஆதர்ஷ் நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய பள்ளிப் பேருந்தின் ஓட்டுநரான கமல் சிங் (55) என்பவரைப் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். மேலும், ஆட்டோ ஓட்டுநர் அஜய் பிரசாத்திடமும் விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விபத்துக்குள்ளான பேருந்து மற்றும் ஆட்டோ ஆகிய இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ள போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற மாணவி விபத்தில் பலியான சம்பவம் டெல்லியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.