ஸ்கூல் பசங்க தான் டார்க்கெட்... தூத்துக்குடியில் 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்; 5 பேர் கைது!
தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் சட்டவிரோதமாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 வாலிபர்களை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா தலைமையிலான காவல்துறையினர் சிவந்தாகுளம் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனங்களில் சந்தேகத்திற்கு இடமாக வந்த நபர்களை மறித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் விற்பனைக்காகக் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
காவல்துறையினர் நடத்திய சோதனையில் அவர்களிடம் இருந்து 5.5 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சங்கர் (20) - லூர்தம்மாள்புரம், வெங்கடேஷ் (23) - சங்கரப்பேரி, காளிதாஸ் (22) - பிரையன்ட் நகர், முத்துமாதவன் (19) - பிரையன்ட் நகர், சுடலைசெல்வம் (20) - வள்ளிநாயகபுரம் ஆகிய 5 வாலிபர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றக் காவலில் அடைக்கக் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.