திருவள்ளூர் அருகே பள்ளி வேன்கள் மோதி விபத்து; 10 மாணவிகள் காயம்!
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே முன்னால் சென்ற வாகனம் திடீரெனத் தடுத்து நிறுத்தப்பட்டதால், பின்னால் வந்த இரண்டு பள்ளி வேன்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய கோர விபத்தில் 10 மாணவிகள் காயமடைந்துள்ளனர்.
திருவள்ளூர் அடுத்த மப்பேடு கீழச்சேரியில் இயங்கி வரும் தூய இருதய ஆண்டவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் சென்ற வேன்கள் வழியில் சென்று கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற சரக்கு வாகனம் ஒன்று திடீரெனப் பிரேக் போட்டதால், அதன் பின்னால் வந்த இரண்டு பள்ளி வேன்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்த எதிர்பாராத விபத்தில் வேன்களில் பயணம் செய்த இரண்டு மாணவிகள் பலத்த காயமடைந்தனர். மேலும் 8 மாணவிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
விபத்தில் காயமடைந்த மாணவ-மாணவிகள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டுத் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த மப்பேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.