ஜூன் 1 ம் தேதி பள்ளிகள் திறப்பு...  நலத்திட்ட பணிகளை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் ஆய்வு!

 

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து வகையான பள்ளிகளும் வரும் ஜூன் 1 ஆம் தேதி அன்று திட்டமிட்டபடி திறக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு புதிய கல்வியாண்டில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட வேண்டிய விலையில்லாப் பாடப்புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் மற்றும் புத்தகப்பைகள் உள்ளிட்ட அனைத்து நலத்திட்டப் பொருட்களும் மாவட்ட மையங்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டன. தற்போது அங்கிருந்து அந்தந்தப் பள்ளிகளுக்கு நேரடியாகப் பொருட்களை விநியோகிக்கும் பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள கல்யாணம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் விலையில்லாப் பொருட்கள் விநியோகப் பணிகளைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று நேரில் சென்று அதிரடியாக ஆய்வு செய்தார். அப்போது பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவ-மாணவிகள் அனைவருக்கும் இந்த நலத்திட்டப் பொருட்கள் எவ்வித தடையுமின்றிச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அங்கிருந்த பள்ளிக்கல்வி அலுவலர்களுக்கு அவர் திட்டவட்டமாக அறிவுறுத்தினார்.

அமைச்சரின் இந்த அதிரடி ஆய்வின் போது பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ் மற்றும் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபிர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர். பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே அனைத்துப் பொருட்களும் கைகளில் கிடைக்கப் போவதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் புதிய உற்சாகத்துடன் புதிய கல்வியாண்டை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றனர்.