தனியார் பள்ளி கல்விக் கட்டண விபரம் ஆன்லைனில் வெளியீடு... பெற்றோர்களே செக் செய்துக்கோங்க!
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 2026-27 கல்வி ஆண்டில் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டண விபரங்கள் தற்போது இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இதற்கென தனியாகக் குறிப்பிட்டுள்ள tnfeecommittee.com என்ற இணையதள முகவரியில் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் பள்ளி கல்விக் கட்டண விபரங்களைத் துல்லியமாக அறிந்து கொள்ளலாம். இந்த அறிவிப்பு மாணவர்களின் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த இணையதளப் பக்கத்தில் மாவட்ட வாரியாகத் தனியார் மெட்ரிக் பள்ளிகள் 2025-26ல் வசூலித்த கட்டண விபரங்களும் தெளிவாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட கட்டணத்திற்கும் இந்த ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணத்திற்கும் உள்ள வித்தியாசத்தைப் பெற்றோர் எளிதாக ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடியும். கட்டண நிர்ணயக் குழுவின் இந்த வெளிப்படையான நடவடிக்கை தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கும்.
மேலும் தங்களுடைய பள்ளிக்கான முறையான கட்டண விபரங்களை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியும் வகையில் அறிவிப்பு பலகையில் பள்ளிகள் கண்டிப்பாக வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்துத் தனியார் பள்ளிகளும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீதான புகார்களைப் பெற்றோர் எளிதாகத் தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.