இன்று 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... 3 நாட்கள் தொடர் விடுமுறையால் குஷியில் மாணவர்கள்!

 

இன்று ஆடிப்பூரம் மற்றும் மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு விருதுநகர், செங்கல்பட்டு, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருள்மிகு ஆண்டாள் திருக்கோயிலின் புகழ்பெற்ற ஆடிப்பூரத் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு இன்று ஆகஸ்ட் 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ள ஆடிப்பூரப் பெருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புகழ்பெற்ற காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா பேராலய விண்ணேற்புப் பெருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்றைய விடுமுறையைத் தொடர்ந்து, நாளை ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம் - அரசு பொது விடுமுறை) மற்றும் ஆகஸ்ட் 16 (ஞாயிற்றுக்கிழமை) எனத் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.