நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு... முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா!
புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நாளை ஏப்ரல் 6ம் தேதி மாவட்ட ஆட்சியர் அருணா உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது.
இருப்பினும் நாளை ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யக் கடைசி நாள் என்பதால், தேர்தல் தொடர்பான அலுவலகங்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. அவர்கள் வழக்கம்போல் செயல்படுவார்கள்.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை காரணமாகப் பள்ளி மாணவர்களின் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை நாளை (ஏப். 6) நடைபெறவிருந்த முழு ஆண்டுத் தேர்வுகள், வரும் ஏப்ரல் 10-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
மற்ற தேதிகளில் நடைபெறும் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி தடையின்றி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா கடந்த மார்ச் 29-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனைத் தரிசிப்பார்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.