"கரண்ட் இல்லை எனப் பள்ளிகளுக்கு லீவு விடுகிறார்கள்!" - உதயநிதி ஸ்டாலின்
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, மாநிலத்தில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டுப் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை காரசாரமாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று காலை மீண்டும் கூடிய தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையில், கடந்த காலங்களில் வங்கக்கடலில் உருவாகும் புயல், பெருமழை அல்லது இயற்கை பேரிடர் காலங்களில் மட்டுமே மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி பள்ளிகளுக்கு அவசர விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போதைய தவெக ஆட்சியில் மின்சாரக் கட்டமைப்பு சீர்குலைந்து, கடுமையான மின்வெட்டு நிலவுவதன் காரணமாகவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவலம் தமிழ்நாட்டில் அரங்கேறி வருவதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
"தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான மின் தட்டுப்பாடு மற்றும் மின் விநியோகக் குறைபாடுகள் காரணமாகப் பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளில் அமர முடியாமல் தவித்து வருகின்றனர். மின்சாரம் இல்லாத ஒரே காரணத்திற்காகப் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அவல நிலை இதற்கு முன் தமிழக வரலாற்றிலேயே நடந்தது இல்லை. இந்த நிர்வாகக் குளறுபடிக்கு அரசு உடனடியாகப் பொறுப்பேற்றுப் போர்க்கால அடிப்படையில் மின் விநியோகத்தைச் சீரமைக்க வேண்டும்" என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எழுப்பியுள்ள இந்த மின்வெட்டுப் புகார் பேரவை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.