பள்ளி மாணவர்களுக்கு 45 நாட்கள் சம்மர் லீவு - ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு! ஆசிரியர்களுக்கு மட்டும் ஏப்.25 வரை பணி!

 

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை தேதிகள் மற்றும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் தேதிகளைப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தற்போது இறுதித் தேர்வுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் ஏப்ரல் 16-ம் தேதியுடன் (வியாழக்கிழமை) அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிவடைகின்றன.

ஏப்ரல் 17-ம் தேதி முதல் மாணவர்களுக்குக் கோடை விடுமுறை தொடங்குகிறது. இதன் மூலம் மே 31 வரை மாணவர்களுக்குத் தொடர்ச்சியாக 45 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. கோடை விடுமுறை முடிந்து புதிய கல்வியாண்டு (2026-27) தொடங்கும் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூன் 1, 2026 (திங்கள்) 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும்.

ஜூன் 4, 2026 (வியாழன்) 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4-ம் தேதி வகுப்புகள் தொடங்கும். (ஆசிரியர்களுக்குப் புதிய பாடநூல் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது).

மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் விடுமுறை என்றாலும், ஆசிரியர்கள் மட்டும் வரும் ஏப்ரல் 25-ம் தேதி வரை பள்ளிக்கு வருகை புரிய வேண்டும். விடைத்தாள் மதிப்பீடு செய்தல், தேர்தல் தொடர்பான பணிகள் மற்றும் அடுத்த கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை பணிகளை அவர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.