450 ஒளிஆண்டு தூரத்தில் வியாழனைப் போன்ற மிகப்பெரிய இளம் கோள் கண்டுபிடிப்பு - விஞ்ஞானிகள் தகவல்!
பூமியிலிருந்து 450 ஒளி ஆண்டுகள் தொலைவில், வியாழன் கிரகத்தைப் போன்ற உருவத்தில் மிகப் பெரிய அளவில் அமைந்துள்ள புதிய இளம் கோள் ஒன்றை வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
'எலியாஸ் 2-24 பி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோள் வெறும் 10 லட்சம் ஆண்டுகள் மட்டுமே வயதுடையது என்பதால், இதனை விஞ்ஞானிகள் 'இளம் கோள்' என்று குறிப்பிடுகின்றனர்.
அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவின் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வாளர்கள் மேற்கொண்ட தொடர் ஆராய்ச்சியின் மூலம் இந்த அரிய கண்டுபிடிப்பு வெளிவந்துள்ள.
இந்த இளம் கோளானது இளம் நட்சத்திரத்தின் தூசிப்படலம் கொண்ட வளையத்திற்குள் தனது சுற்றுவட்டப்பாதையை அமைத்துச் சுற்றி வருகிறது. இது கோள்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள உதவியாக உள்ளது.
இந்தக் கோள்களின் வளையங்களில் காணப்படும் இடைவெளிகள் மற்றும் பிற அம்சங்கள், கோள் உருவாக்கத்தின் தொடக்கக்கட்ட நடைமுறைகளிலேயே அவை இன்னும் தொடர்வதைக் காட்டுகின்றன. இதன் மூலம் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய சூரிய குடும்பம் எப்படி இருந்திருக்கும் என்பது குறித்த ஆய்வுகளுக்கு இது பெரும் உதவியாக அமையும்.