5 வது மாடியில் சார்ஜ் போடும் போது வெடித்து சிதறிய இஸ்கூட்டர்... பகீர் வீடியோ!
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா மமுரா பகுதியில் உள்ள 5 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் சார்ஜ் செய்யப்பட்டிருந்த மின்சார இருசக்கர வாகனம் ஒன்று திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் அங்கிருந்த பிற வாகனங்களுக்கும் தீ மளமளவெனப் பரவியதால் தரைத்தளம் முழுவதும் அடர்ந்த நச்சுப் புகையால் சூழப்பட்டு அந்தப் பகுதியே போர்க்களமாக மாறியது. கட்டிடத்தின் மேல் தளங்களில் தனியார் தங்கும் விடுதியும் செயல்பட்டு வந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் வெளியேற வழி தெரியாமல் தவித்தனர்.
உயிருக்கு அஞ்சிய பலரும் உடனடியாக மொட்டை மாடிக்கு ஓடிச் சென்று அங்கிருந்து அக்கம் பக்கத்தில் உள்ள கட்டிடங்களுக்குத் தாவித் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். அப்போது அருகில் நடந்து வந்த ஒரு கட்டிடக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தங்களின் பெரிய ஏணியை இந்த மாடிக்கு நீட்டிப் பலரைக் காப்பாற்றினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஏணிகள் மூலமும் ஜன்னல்களை உடைத்தும் 100-க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டனர். இருப்பினும் இந்த நச்சுப் புகையைச் சுவாசித்ததால் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்ட இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தக் கோர விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் அந்த 5 மாடி கட்டிடம் முற்றிலும் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. விதிகளுக்குப் புறம்பாகக் குறுகிய இடத்தில் தங்கும் விடுதி நடத்தியதாகக் கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் விடுதி நடத்தி வந்த நபர் ஆகிய இருவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 50 குடும்பங்கள் வசித்து வந்த இந்தக் கட்டிடத்தில் தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையாலும் அக்கம் பக்கத்தினரின் உதவியாலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களைக் கையாளும் போது நிலவும் அலட்சியம் எப்படிப்பட்ட பேராபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பெரும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.